மண்டல, மகரவிளக்கு சீசன் தொடக்கம்: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, இன்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு வரத் தயாராகி வருகின்றனர்.
தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், கோவிலின் தற்போதைய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைத்து தீபாராதனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை (நவம்பர் 17) அதிகாலை 3 மணியிலிருந்து ஐயப்பனுக்கு வழக்கமான தினசரி பூஜைகள் தொடங்கும். மண்டல கால வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சீசனில் தினமும் அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)