திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.95 கோடி உண்டியல் காணிக்கை! 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை மற்றும் காணிக்கை மூலம் ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி மட்டும் 82,173 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 95 லட்சம் வசூலாகியுள்ளது.
சுவாமி தரிசனம் செய்த பக்தர்களில் 27,058 பேர் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். பக்தர்களின் தேவைக்காக லட்டு பிரசாதங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, திருப்பதிக்கு வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில் அன்னப்பிரசாதமும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
தரிசனம், தலைமுடிக் காணிக்கை, உண்டியல் வசூல், லட்டு விற்பனை மற்றும் அன்னப்பிரசாத விநியோகம் என நவம்பர் 16ஆம் தேதி திருப்பதி கோயிலில் பக்தர்களின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் இருந்ததாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.




கருத்துகள் (0)