Oplus_131072
(நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடவுள் செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடு தான் அழுகை)
அழுகையில் தான் நம் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
அழுகை குழந்தைகளின் மொழி! பசி, தாகம், அன்பு, அரவணைப்பு என எது தேவைப்பட்டாலும் குழந்தைகள் அழுகின்றன.
அதனால் அழுகையை, “வாயுள்ள தொப்புள் கொடி” என ஒரு நிபுணர் வர்ணிக்கிறார்.
நாம் வளர்ந்து பெரியவர்களான பிறகு நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும், நாம் ஏன் அழுகிறோம்?
நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
துக்கமும் விரக்தியும் நம்மை வாட்டும் போது நாம் அழலாம்.
மனக்கஷ்டமும் உடல் வேதனையும் நம் கண்ணீருக்குக் காரணமாகலாம்.
அதேசமயம் அளவில்லா சந்தோஷம் அடையும் போது, நிம்மதி பெருமூச்சு விடும் போது, எதையாவது சாதிக்கும் போது நமக்கு ஆனந்தக் கண்ணீர் வரலாம்.
மற்றவர்கள் அழுவதைப் பார்க்கும் போதும் நாம் கண்ணீர் விடலாம்.
சில சமயங்களில், ஒரு படம் பார்த்த போது அல்லது புத்தகம் படித்த போது நீங்கள் அழுதிருக்கலாம்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது.
‘கொஞ்ச நேரத்தில் நிறைய விஷயங்களைக் கண்ணீரால் வெளிப்படுத்த முடிகிறது’ என்று அழுகையைப் பற்றி அடல்ட் க்ரையிங் என்ற புத்தகம் சொல்கிறது.
கண்ணீர் நம்மைச் செயல்பட வைக்கிறது.
உதாரணத்திற்கு, யாராவது துக்கத்தில் அழுவதைப் பார்க்கும் போது நம்மால் சும்மா இருக்க முடியாது. உடனே, அந்த நபரை ஆறுதல்படுத்தவோ அவருக்கு உதவவோ முயற்சி செய்வோம்.
அழுகை, துக்கத்தின் வடிகால் என சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தால் அது அவருடைய உடல்நலத்தைப் பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள்.
ஆனால் அறிக்கைகள் காட்டுகிறபடி, 85 சதவீத பெண்களும் 73 சதவீத ஆண்களும் அழுத பிறகு நன்றாக உணருவதாகச் சொல்கிறார்கள்.
“சில சமயத்துல, எனக்கு அழணும்னு தோனும். அப்படி அழுததுக்கு அப்புறம் என் மனசு லேசாயிடும், நிம்மதியாகவும் இருக்கும். விஷயங்களத் தெளிவா பாக்க முடியும்” என்கிறார் நோமீ என்ற பெண்.
இப்படி நிம்மதியாக உணர்வதற்கு அழுகை மட்டுமே காரணமில்லை.
நம்முடைய அழுகைக்கு மற்றவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
உதாரணத்திற்கு, நாம் கண்ணீர் விடுவதைப் பார்த்து மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தும் போது, நமக்கு உதவும் போது நாம் நிம்மதியாக உணர்வோம்.
ஆனால், நம்மை யாரும் கண்டுகொள்ளாவிட்டால் அது நமக்கு அவமானமாக இருக்கும், நம்மை உதாசீனப்படுத்தி விட்டது போல் உணர்வோம்.
நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடவுள் செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடு தான் அழுகை.
அழுகையைப் பற்றி நமக்குத் தெரிந்த உண்மை இது மட்டுமே.
தெரியாத உண்மைகள் இன்னும் எத்தனை எத்தனையோ.
ஆம், நம் அழுகை இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது!
விஷயம் தெரியுமா?
பொதுவாக, பிறந்த குழந்தைகள் அழும்போது கண்ணீர் வடிப்பதில்லை. கண்ணீர் நாளங்கள் முழுமையாக உருவாக பல வாரங்கள் ஆகின்றன. அதன் பிறகே, குழந்தைகள் கண்ணீர் வடிக்கின்றன.
அதுவரை, கண்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஈரப்பசை அவர்களுடைய கண்களில் இருக்கிறது.
கண்ணீரில் மூன்று விதம்…
அடிப்படை கண்ணீர் (Basal Tears)..
கண்கள் பாதுகாப்பாகவும் வழுவழுப்பாகவும் இருக்க, கண்ணீர் நாளங்கள் இந்தக் கண்ணீரை எப்போதும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. தெளிவாகப் பார்க்கவும் இது உதவுகிறது. நாம் கண் சிமிட்டும் போது, இந்தக் கண்ணீர் நம் கண்கள் முழுவதும் பரவுகிறது.
எதிர்வினைக் கண்ணீர் (Reflex Tears)…
கண்களில் ஏதாவது தூசி விழுந்தால் அல்லது அதிக நெடியினால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் வருவது தான் இந்தக் கண்ணீர். நாம் கொட்டாவி விடும் போதும் சிரிக்கும் போதும் கூட இந்தக் கண்ணீர் வருகிறது.
உணர்ச்சி சார்ந்த கண்ணீர்
(Emotional Tears)..
மனிதர்களுடைய உணர்ச்சியின் வெளிக்காட்டாக வருவது தான் இந்தக் கண்ணீர்.
ஆழ்ந்த துக்கத்தையோ சந்தோஷத்தையோ நாம் வெளிக்காட்டும் போது இந்தக் கண்ணீர் வரும்…
சிரித்தாலும்,அழுதாலும்.,
கண்ணீர் வரும்.!




