தூக்கம் மனிதர்களின் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால், தூங்கும் நிலை சரியாக இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
குப்புறப்படுத்து தூங்குவதால் முகத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதுகெலும்பு மற்றும் ரத்தக்குழாய்களில் அழுத்தம் ஏற்படுவதுடன், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் சப்ளையும் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்பு பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் செரிமானக் கோளாறு, அல்சர் மற்றும் வாயுத் தொந்தரவு ஏற்படலாம். தொடர்ந்து குப்புறப்படுத்து தூங்குவது கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு வலிக்கும் காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.
பொதுவாக நேராகவோ அல்லது ஒரு புறமாகவோ படுத்து தூங்குவது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு புறமாக சாய்ந்து தூங்கலாம் என்றும், கர்ப்பிணிகள் இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்றும் கூறப்படுகிறது. முதுகுவலி அல்லது கை, கால் வலி உள்ளவர்கள் குறுகிய நேரம் குப்புறப்படுத்து ஓய்வெடுக்கலாம் என்றாலும், தொடர்ந்து அந்த நிலையிலேயே தூங்குவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.




