சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி பகுதியில் அமைந்துள்ள Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால், நுழைவு வாயில் அடைபட்டு 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இருந்து அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உதவியுடன் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பாக மாநில நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதுடன், தொழிலாளர்களை விரைவாக மீட்க அனைத்து அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




