எல்லோரிடமும்
இருக்கிறது
வைத்துக் கொண்டே
இல்லையென்று சொல்லும்
இன்னொரு முகம்.
நம்மிடம் கேட்கட்டும்
அப்புறம் பார்க்கலாம்
என வேண்டுமென்றே தாமதப்படுத்தும் முகம்.
மனது முழுதும்
வெறுப்பை வைத்துக்கொண்டு,
வலிய வரவழைத்த சிரிப்பை பரிமாறும்
வன்மம் நிறைந்த முகம்.
சொல்லுகின்ற பொய்க்கு தகுந்தவாறு,
அவ்வப்போது நவரசங்களையும்
வெளிப்படுத்தும் விகார முகம்.
பயணத்தில்
வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் தராமல்,
எதிர் திசையில் எங்கோ பார்த்துக் கொண்டே பயணிக்கும் பாசாங்கு முகம்.
ஒரே முகத்தில் இப்படி எத்தனையோ முகமூடிகளை அணிந்து பயணப்பட்டாலும்,
ஆங்காங்கே அத்தி பூத்தாற் போல,
நம் நலம் விரும்பும்,
சில நல்ல முகங்கள் நமக்கென இருக்கத்தான்
செய்கின்றன.
பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள்
அந்த தங்க முகங்களை…




