தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் மீது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற இளைஞர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் பிறப்பித்த அவசரச் சுற்றறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையை மீறி போராட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஜனநாயக ரீதியான மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் இந்த அணுகுமுறை கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காவல்துறை கைது செய்ததும் சர்ச்சையானது. மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றபோதிலும், பொது அமைதி மற்றும் கல்வி நிறுவன வளாக அமைதியை காரணம் காட்டி அரசு கடுமையான நடவடிக்கை எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. நீட் எதிர்ப்பை ஆதரித்துக்கொண்டே, களத்தில் போராடும் அமைப்புகளை ஒடுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டார கிராமங்களில் வசிக்கும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினரின் முழு விவரங்களையும் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி உறுப்பினர்களின் விவரங்களை குற்றப் பின்னணி கொண்டவர்களைப் போல சேகரிக்க முயன்றதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் தற்செயலானவையா அல்லது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.




