தற்காலத்தில் பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்ட திருமணங்களில் கூட “மணமுறிவு” ஏற்படுவது ஏன்? சுயநலமிக்க காமம்…
(இதைப் படித்தவுடன் காமம் தான் வாழ்க்கையா, இதெல்லாம் காரணம் இல்லை அன்பு தான் முக்கியம் என்று உத்தம சிந்தனை உதித்தவர்கள் தயவு செய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)..
சரி விசயத்திற்கு வருவோம். சுயநலமிக்க காமத்தில் துளியும் காதலே இல்லாமல், தேவைக்கு துணையின் உடலை நாடும் ஆணை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்கும் . காதலும் காமமும் சரிவர கலந்து கையாளுவதுதான் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான தாம்பத்யத்தின் திறவு கோல்.
அழகான மனைவியை விட்டு விட்டு ஆப்பிள் போனையே நோண்டிக் கொண்டிருப்பது. (பெண்ணின் அழகை சட்டை செய்யாமல் இருக்கும் ஆண் மெதுவாக பெண்ணிற்கு எரிச்சலூட்ட ஆரம்பித்து விடுவான்.)
பரஸ்பரம் சுதந்திரம் கொடுக்க மறுப்பது. (ஒரு நாள் சனியன் அவன் நண்பர்களுடன் அந்த பியரை குடித்து விட்டுதான் போகட்டுமே.)
ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் ஒன்று தான். அதற்கு மதிப்பு தராமல் இருப்பது. (ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் மனைவி மீதான ஆச்சாரக் கோப்பான எதிர்பார்ப்பு தான் அவர்களின் ஆசைகளை மனம் திறந்து சொல்ல விடாமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கிறதே ஒழிய, உணர்ச்சிகளை மட்டுப் படுத்த வில்லை.)
வாழ்க்கைத் துணை தான் முக்கியம் அவர்களின் குடும்பம் அல்ல என்று இருவரும் நினைப்பது. (தேவைக்கு பொண்டாட்டி போதும், ஆசைக்கு புருஷன் போதும் என்பது அன்பு இல்லாத வாழ்க்கை ஆகி விடும்)
அதீத எதிர்பார்ப்பு கொள்வது (சினிமா நிறைய பார்த்து விட்டு ஆர்வக்கோளாறில் கணவன் நடுராத்திரியில் லைட் போட்டு மனைவிக்கு பரிசு கொடுப்பது போன்றும், கணவன் வேலைவிட்டு வந்ததும் புடவையில் பேக்கை வாங்கி முத்தமிடுவது போன்றும் பேண்டசி கனவுகளை கண்டு ஏமாற்றம் அடைவதற்கு வழிவகுக்கும்)
குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது . (என்ன இதெல்லாம் காரணமா என்று தோன்றுகிறதா. திருமணம் முடிந்த கையோடு குழந்தை பெறுவது கணவன் மனைவி அன்பினை இன்னும் வலிமையாக்கும். என்னதான் லியோனார்டோ டிகேப்ரியோ, ஸ்கார்லட் ஜோஹன்சன்னாக இருந்தாலும் ஒரே மூஞ்சியையே எப்படி பார்த்துக் கொண்டிருப்பது ?)
சிறிய விஷயத்திற்கு எல்லாம் ஆண்களே இப்படித்தான், பெண்களே இப்படித்தான் என பொதுப் போக்கில் பேசுவது. (இருவருக்குமே உளவியலின் அடிப்படையை கொஞ்சம் சீண்டிப் பார்க்கும்)
பெண்களுக்கு தோழர்களே இருக்கக் கூடாது, ஆண்களுக்கு நண்பிகளே இருக்கக் கூடாது என்று இரண்டாம் நூற்றாண்டு சிந்தனையில் நினைத்து கொண்டிருப்பது.
பொருளாதார ரீதியில் ஒருவருக் கொருவர் உதவாமல் எனக்கென்ன சிவனே என்று இருப்பது (வருமானத்தை மீறி மனைவி செலவு செய்வதும், கணவன் செலவு செய்யும் போது மனைவி கண்டு கொள்ளாமல் இருப்பதும் குடும்பம் சறுக்க காரணமாக அமையும். சில மனைவி மார்கள் கணவனின் சம்பளத்தை பற்றியெல்லாம் கவலைப் படாமல், ஒரு கணக்கீடு கூட போடத்தெரியாமல் சும்மா தொம்மனே “எனக்கு ஒரு ஆரம் வேணும்”, “உங்களுக்கு ஒரு சொந்த வீடு இருக்கா” என மொட்டை கட்டை ஆசையை புருஷனின் காதுக்குள் நுழைப்பார்கள்)..
சில உறவுகள்.. உண்மையான சில உறவுகளை பேணிக் கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!




