செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

50 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத அரசு மருத்துவமனை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

50 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத அரசு மருத்துவமனை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், அந்த இடத்திற்கான வாடகை கடந்த 50 ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது தொடர்பான விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையே கோயில் நிலத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வருவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவமனை அமைந்துள்ள கோயில் இடத்திற்கு நீண்டகாலமாக வாடகை செலுத்தப்படாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசே தனக்குச் செலுத்த வேண்டிய வாடகையை முறையாகச் செலுத்தாமல் இருந்தால், பொதுமக்களிடமும் மற்ற நிறுவனங்களிடமும் வாடகை எவ்வாறு வசூலிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

 

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள வாடகைத் தொகை எவ்வளவு, கடந்த காலங்களில் வாடகை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இனிமேல் நிலுவைத் தொகையை வசூலிக்க மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

 

இதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 50 ஆண்டுகளாகத் தொடரும் வாடகை நிலுவை விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.