மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்: மீனாட்சி நாச்சியார் வீட்டில் போலீசார் தொடர் சோதனை!

மதுரை பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அடுத்தடுத்து முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பிரபலமான மீனாட்சி நாச்சியார் மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீனாட்சி நாச்சியாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாடக்குளம் கண்மாய் மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது சுமார் 5 முதல் 10 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மீனாட்சி நாச்சியாரின் வீட்டிலும் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் மேலும் ஏதேனும் நகைகள் அல்லது வழக்கிற்குத் தொடர்புடைய பொருட்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நகைக்கடை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.




கருத்துகள் (0)