செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
உலகம்

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! முதலில் தாக்கும் வரை காத்திருக்க மாட்டோம் – துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி கருத்து!

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை! முதலில் தாக்கும் வரை காத்திருக்க மாட்டோம் – துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிரடி கருத்து!

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்குக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தும் வரை தாங்கள் காத்திருக்கப் போவதில்லை என்றும் ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

இதுதொடர்பாக பேசிய அவர், ஈரானை எளிதில் முடக்கவோ அல்லது அரசியல் ரீதியாக அடிபணியச் செய்யவோ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு ஈரான் பணிந்துவிடும் என்ற எண்ணம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஈரான் ஒன்றும் பொருளாதார முற்றுகையால் முடக்குவதற்கு கியூபாவோ அல்லது வெளிநாட்டு அழுத்தங்களால் அடிபணிய வைப்பதற்கு வெனிசுலாவோ அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

 

ராஜதந்திர பேச்சுவார்த்தைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைகள், ராணுவத் தாக்குதல்கள் என எந்த வகையான சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானால் அதற்கேற்ப பதிலளிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.

 

ஈரான் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்தக் கடுமையான எச்சரிக்கை, அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றமான உறவில் மேலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.