வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசு மருத்துவமனையில் நோயாளியின் நகைகளுடன் மாயமான நர்ஸ் கைது!

அரசு மருத்துவமனையில் நோயாளியின் நகைகளுடன் மாயமான நர்ஸ் கைது!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கவுசல்யா (50) என்பவர், கடந்த ஜூன் 6ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதி இதயத்தின் செயல்பாட்டை அறியும் எக்கோ பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அணிந்திருந்த 2.25 பவுன் தங்க நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறி ஜோதி (32) என்ற செவிலியர் தற்காலிகமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

பரிசோதனை முடிந்து கவுசல்யா திரும்பியபோது, நகைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர் ஜோதி அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. பின்னர் நகைகளைத் திருப்பிக் கேட்டபோதும் அவர் வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கவுசல்யா அளித்த புகாரின் அடிப்படையில் ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில், மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜோதியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் நகைகளைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான செவிலியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.