அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை: EMIS பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
இந்தப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைப் பரிசீலித்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர், மாணவர் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை 20.11.2026 வரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவச பேருந்து பயண அட்டை பெறுவதற்கான மாணவர் விவரங்களைப் பதிவேற்ற பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.




கருத்துகள் (0)