சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போதைய மொழிகளையே தொடரலாம்.. கல்வியாண்டின் நடுவில் மாற்றக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போதைய மொழிகளையே தொடரலாம்.. கல்வியாண்டின் நடுவில் மாற்றக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஏற்கெனவே தேர்வு செய்து படித்து வரும் மொழிகளையே நடப்பு கல்வியாண்டில் தொடர்ந்து படிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய மொழிக் கொள்கையை அமல்படுத்தும் பெயரில், கல்வியாண்டின் இடையில் மாணவர்களின் மொழித் தேர்வை மாற்றும்படி பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்ற நடைமுறையை சிபிஎஸ்இ கொண்டு வந்தது. இதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், மொழிப் பாடங்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இரண்டு மொழிகளை தேர்வு செய்து படித்து வரும் மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் அதே மொழிகளைத் தொடரலாம் என்றும், மூன்று மொழிகளை தேர்வு செய்துள்ள மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே படித்து வரும் மூன்று மொழிகளையும் தொடர்ந்து பயிலலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட மொழிக் கொள்கையை காரணம் காட்டி, மாணவர்களின் தற்போதைய மொழித் தேர்வில் பள்ளிகள் திடீர் மாற்றங்களை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழிக்கான கட்டாய பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு இந்த கல்வியாண்டிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீட்டை பள்ளிகளே உள்மதிப்பீடு முறையில் நடத்திக்கொள்ளலாம். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் இறுதி பொதுத்தேர்வு முடிவுகளை பாதிக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

இதன் மூலம், தற்போது இரண்டு மொழிகளை படித்து வரும் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அவற்றையே தொடர முடியும். மூன்றாவது மொழியை தேர்வு செய்வது மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மாற்றங்கள் அடுத்த கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு கல்வியாண்டின் நடுவில் ஏற்படக்கூடிய குழப்பங்களை தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.