செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், குல்காம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் 11ஆம் தேதி குல்காம் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயமடைந்தனர். இதற்கிடையே கிஷ்திவார் மாவட்டத்தில் போலீஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பாபி சந்த் மற்றும் யஷ்பால் குமார் ஆகிய இரு வீரர்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்தக் கொலைச் சம்பவங்களுக்குப் பின்னால் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்களைப் பிடிப்பதற்காகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை என்கவுன்டராக மாறியது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லத்தீப் பட் மற்றும் அவரது கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.