விமானப் பணிப்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை: கொள்ளையைத் தடுக்க முயன்றபோது விபரீதம் என நண்பர் தகவல்!

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதியில் விமானப் பணிப்பெண் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போண்டாரானி கிராமத்தில் வைங்கங்கா ஆற்றங்கரையோரம் வர்ஷா துர்கார் (35) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த வர்ஷா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமர் சையத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த அவர், சம்பவத்தன்று தனது சிறுவயது நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது ஆற்றங்கரைப் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வர்ஷாவுடன் சென்றிருந்த அவரது நண்பர் அளித்த தகவலின்படி, அங்கு கொள்ளைச் சம்பவம் நடைபெற முயன்றதாகவும், அதனைத் தடுக்க வர்ஷா முயன்றபோது அவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நண்பர் தெரிவித்துள்ள கொள்ளை முயற்சி குறித்த தகவல்களையும், சம்பவம் நடைபெற்ற சூழ்நிலையையும் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான் கொலைக்கான முழுமையான பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)