கேரளாவில் துப்பாக்கிக் காயத்துடன் 27 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் போவிகானம் அருகே உள்ள கட்டிப்பள்ளம் பகுதியில், 27 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கே. மொய்தீன் குஞ்சியின் மகன் ஹைதர் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கட்கிழமை நள்ளிரவு அவரது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்தில், தனது ஸ்கூட்டருக்கு அருகே துப்பாக்கியுடன் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.
முதலில் இது சாலை விபத்தாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அவரது கன்னத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் இருப்பதைப் போலீசார் கண்டறிந்தனர். ஸ்கூட்டரில் சென்றபோது அவர் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்து, குண்டு தாடை வழியாகச் சென்று தலையைத் தாக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது நாட்டுத் துப்பாக்கியா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ஆதூர் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், துப்பாக்கி வெடித்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஹைதர் அலி, போவிகானத்தில் ஜவுளிக்கடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அவருக்கு ஷாஃபி, கதீஜா, நசீரா ஆகிய உடன்பிறப்புகள் உள்ளனர்.




கருத்துகள் (0)