செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
இந்தியா

திருமண மறுப்பால் பழிவாங்க சதி: இளைஞரை பொய் போக்சோ வழக்கில் சிக்க வைக்க முயற்சி!

திருமண மறுப்பால் பழிவாங்க சதி: இளைஞரை பொய் போக்சோ வழக்கில் சிக்க வைக்க முயற்சி!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தைப் பழிவாங்கும் நோக்கில், அவரது தம்பியைப் பொய்யான போக்சோ வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர், திருமண இணையதளம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அந்தப் பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணா அவரது குடும்பத்தைப் பழிவாங்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதற்காக இடைத்தரகர்கள் உதவியுடன் 17 வயது சிறுமி ஒருவரை ஏற்பாடு செய்து, இணையம் வழியாக அந்தப் பெண்ணின் தம்பி ஸ்ரீராமுடன் பழக வைத்துள்ளார். சுமார் மூன்று மாதங்கள் இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்ரீராமை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு வரவழைத்த சிறுமி, அவர் தமக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஸ்ரீராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

 

இதற்கிடையே, புகார் அளித்த சிறுமி சாலையில் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியானது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஸ்ரீராமைக் கைது செய்வதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு புகாரின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்தச் சூழலில், வேறொரு திருமண மோசடி வழக்கில் நெய்வேலி போலீசாரால் கைது செய்யப்பட்ட சுரேஷ் கண்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீராமுக்கு எதிராகப் பொய்ப் புகார் அளிக்கத் தானே திட்டமிட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீராமைக் கைது செய்ய வைப்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் காவல்துறையினருக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட பழிவாங்கலுக்காகப் போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றதாகவும், இந்த விவகாரத்தில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.