புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ரூ.2.5 லட்சம் வரை தங்க நகைக் கடன் பெற 85% வரை அனுமதி – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்!

ரூ.2.5 லட்சம் வரை தங்க நகைக் கடன் பெற 85% வரை அனுமதி – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள்!

தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வழிகாட்டுதல்களை வணிக வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட வங்கிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

புதிய விதிமுறைகளின்படி, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் வழங்கப்படும் கடன் தொகைக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 75 சதவீதமாக இருந்த கடன் வரம்பு, ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 85 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் வழங்கலாம். ரூ.5 லட்சத்திற்கு அதிகமான கடன்களுக்கு தொடர்ந்து 75 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

 

மேலும், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களின் நகைகளை உடனடியாக ஏலம் விட முடியாது என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது. முதலில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முறையான அறிவிப்பு மற்றும் நோட்டீஸ் அனுப்பி, தேவையான நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகே அடமான நகைகளை ஏலம் விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாற்றங்கள் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான தங்க நகைக் கடன்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப கூடுதல் கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், கடன் தவறும்போது வாடிக்கையாளர்களின் நகைகள் ஏலம் விடப்படும் நடைமுறையிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.