மழையால் வரத்து சரிவு: கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை!

தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் வரத்து பெருமளவில் சரிந்துள்ளதால் அதன் விலை பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில், தற்போது அதன் வரத்து 20 டன்னாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் சில இடங்களில் கிலோ ரூ.250 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயத்தைத் தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையாகிறது. அவரைக்காய் மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையும் கிலோ ரூ.100 என்ற அளவை எட்டியுள்ளது. இதுதவிர, பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மழை காரணமாக வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




கருத்துகள் (0)