செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
இந்தியா

நந்தினி தயிர் பாக்கெட்டில் ஜியோ சிம் கார்டு இருந்ததாக வெளியான வீடியோ; விசாரணையில் அம்பலமான உண்மை, இளைஞர் கைது!

நந்தினி தயிர் பாக்கெட்டில் ஜியோ சிம் கார்டு இருந்ததாக வெளியான வீடியோ; விசாரணையில் அம்பலமான உண்மை, இளைஞர் கைது!

கர்நாடகாவில் நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டு இருந்ததாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தயிர் பாக்கெட்டில் சிம் கார்டு இருந்ததாகக் கூறி வீடியோ வெளியிட்ட 35 வயதான அருண் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், சிம் கார்டு தயிர் பாக்கெட்டிற்குள் இருந்ததாகக் கூறப்பட்ட தகவல் தவறானது என்பது தெரியவந்துள்ளது.

 

கர்நாடக மாநிலம் மத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சன்னசந்திரா கிராமத்தைச் சேர்ந்த அருண் குமார், நந்தினி தயிர் பாக்கெட்டில் ஜியோ சிம் கார்டு இருந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் வேகமாகப் பரவி, நந்தினி நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் குறித்த கேள்விகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது. இதையடுத்து, மன்முல் சந்தை மேலாளர் பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், மத்தூர் காவல் ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை அருண் குமாரைக் கைது செய்தனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட சிம் கார்டு தயிர் பாக்கெட்டின் உள்ளே வைக்கப்படவில்லை என்பதும், அதன் வெளிப்புறத்தில் தற்செயலாக ஒட்டியிருந்ததும் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிலையம் அருகிலுள்ள நந்தினி பாலகத்தில் தயிர் பாக்கெட்டை வாங்கிய அருண் குமார், அதனைத் தனது இருசக்கர வாகனத்தின் பையில் வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த சிம் கார்டு தயிர் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பின்னர் வீட்டிற்குச் சென்ற அவர், தயிர் பாக்கெட்டை வெட்டி அதிலிருந்த தயிரைப் பாத்திரத்தில் ஊற்றியபோது, வெளிப்புறத்தில் ஒட்டியிருந்த சிம் கார்டும் தயிருடன் சேர்ந்து உள்ளே விழுந்துள்ளது. இதைக் கவனித்த அருண் குமார், சிம் கார்டு பாக்கெட்டிற்குள் இருந்ததாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். உண்மை என்ன என்பதைச் சரிபார்க்காமல் அவசரமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

மேலும், அந்த சிம் கார்டு அருண் குமாரின் மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், அவரது மனைவி என். சுதா அதைப் பயன்படுத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இதற்கிடையில், தனது தவறான புரிதலால் இந்தச் சம்பவம் ஏற்பட்டுவிட்டதாகவும், நந்தினி நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமானவை என்றும் கூறி அருண் குமார் மற்றொரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

இருப்பினும், இந்த விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்புடைய அருண் குமார், நந்தினி தயிர் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டதாக மன்முல் தலைவர் ஹரிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவால் பெரும் சர்ச்சை உருவான நிலையில், சிம் கார்டு பாக்கெட்டிற்கு வெளியே ஒட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.