இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி 30 மாதங்களில் இல்லாத புதிய உச்சம்.. ரூ.231.82 லட்சம் கோடியாக உயர்வு!

இந்தியாவில் வங்கிகள் வழங்கி வரும் கடன்களின் அளவு கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி 19.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் தொகை ரூ.231.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கிகளின் கடன் வளர்ச்சி 15.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது இந்த வளர்ச்சி கணிசமாக உயர்ந்திருப்பது வங்கி கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கியுள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை வாங்குவதற்காக வங்கிகளில் கடன் பெற்றதும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பண்டிகைக் கால நுகர்வு அதிகரித்ததன் தாக்கம் வங்கிகளின் கடன் வளர்ச்சியிலும் பிரதிபலித்துள்ளது.




கருத்துகள் (0)