ஓசூர் விமானியை கரம்பிடித்த வியட்நாம் ஆசிரியை! பெற்றோர் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்ற காதல் திருமணம்!

தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்த விமானி கார்த்திக்கும், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஆசிரியை சியோ டிங்கனுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இருவரின் காதல் தற்போது திருமண உறவாக மலர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் சியோ டிங்கனுக்கும், ஓசூரைச் சேர்ந்த விமானி கார்த்திக்குக்கும் கடந்த ஜூன் மாதம் அறிமுகமாகி காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையிலான உறவு வலுப்பெற்ற நிலையில், தங்களது காதலைத் திருமணத்தில் முடிக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இரு வீட்டாரிடமும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இன்று ஓசூரில் இருவருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணை தமிழகத்தைச் சேர்ந்த விமானி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் திருமணம் குறித்து மணப்பெண் சியோ டிங்கன் பேசுகையில், கார்த்திக்குடன் உண்மையான காதல் உறவில் இணைந்து வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடன்தான் இந்தியாவுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் சம்மதம் அளித்ததைத் தொடர்ந்து இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.




கருத்துகள் (0)