சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஒரே மரவள்ளி செடியில் 27 கிலோ கிழங்குகள் விளைச்சல்! திண்டுக்கல் முதியவரின் தோட்டத்தில் ஆச்சரியம்!

ஒரே மரவள்ளி செடியில் 27 கிலோ கிழங்குகள் விளைச்சல்! திண்டுக்கல் முதியவரின் தோட்டத்தில் ஆச்சரியம்!

திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட மரவள்ளிச் செடியில் எதிர்பாராத வகையில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. ஒரே செடியில் சுமார் 27 கிலோ எடையுள்ள மரவள்ளிக்கிழங்குகள் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த அருணாச்சலம் (82) என்பவர், அரசு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் மரவள்ளிச் செடிகளை இயற்கை முறையில் வளர்த்து தொடர்ந்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது தோட்டத்தில் இருந்த ஒரு மரவள்ளிச் செடியை அறுவடை செய்வதற்காகத் தோண்டிப் பார்த்தபோது, அதன் அடியில் எதிர்பாராத அளவுக்கு கிழங்குகள் வளர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

 

அந்த ஒரு செடியில் மட்டும் 9 மரவள்ளிக்கிழங்குகள் வளர்ந்திருந்ததுடன், அவற்றின் மொத்த எடை சுமார் 27 கிலோவாக இருந்துள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அருணாச்சலத்தின் தோட்டத்திற்கு வந்து வியப்புடன் கிழங்குகளைப் பார்வையிட்டுச் சென்றனர். வீட்டுத் தோட்டத்தில் இயற்கை முறையில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடியில் கிடைத்த இந்த அபரிமிதமான விளைச்சல் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.