குழந்தைகளின் உலகம் அறிவின் வெளிச்சத்தில் விரியட்டும்; குழந்தைகள் தினத்தில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளின் எதிர்காலம் வெறும் திரைகளின் வெளிச்சத்தோடு நின்றுவிடாமல், அறிவு மற்றும் புதிய சிந்தனைகளின் ஒளியில் விரிவடைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பது, தரமான கல்வியை வழங்குவது, அறிவியல் மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பது மற்றும் அவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவது போன்ற நோக்கங்களுடன் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான திறமைகளும் விருப்பங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அவற்றை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தாங்கள் விரும்பிய துறைகளில் முன்னேறி, தங்களுக்கான எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் அரசு பொறுப்புடன் துணைநிற்கும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் உறுதியளித்துள்ளார்.




கருத்துகள் (0)