புதன், நவம்பர் 11, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

ஒரு பாக்கெட் இட்லி மாவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் முதிய பெண்ணின் வலியும் வாழ்க்கைப் போராட்டமும்!

ஒரு பாக்கெட் இட்லி மாவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் முதிய பெண்ணின் வலியும் வாழ்க்கைப் போராட்டமும்!

சென்னை பூந்தமல்லி – ஆவடி சாலையில் மாலை நேரம். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் அந்தச் சாலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து கொண்டிருந்தன. சாலையோரக் கடையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், சர்க்கரை இல்லாத கசப்பான காபியை மெதுவாகக் குடித்தபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது எழுபது வயதைத் தாண்டிய ஒரு மூதாட்டி அவனருகே வந்தார். நரைத்த தலைமுடி, வெளுத்துப்போன வெள்ளைப் புடவை, பழைய ரவிக்கை என வறுமையின் அடையாளங்கள் அவரது தோற்றத்தில் தெளிவாகத் தெரிந்தன. கையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பையை வைத்திருந்தார்.

 

"கண்ணு, இன்னைக்கு பத்து பாக்கெட் இட்லி மாவுதான் வாங்கிட்டு வந்தேன். அதுல கடைசியா ஒரு பாக்கெட் மட்டும் மிச்சம் இருக்கு. நீ வாங்கிக்கிறியா ராஜா?" என்று அன்புடன் கேட்டார்.

 

அந்த இளைஞன் முதலில் ஆர்வமில்லாமல் பார்த்தான். பின்னர் என்ன விற்கிறார் என்று கேட்டபோது, இட்லி மாவு என்றார் மூதாட்டி.

 

"நல்லா பஞ்சு மாதிரி இட்லி வரும் கண்ணு. ஒரு பாக்கெட் பதினைந்து ரூபாய்தான். ஐந்து இட்லி வரைக்கும் செய்யலாம்" என்று விற்பனை செய்ய முயன்றார்.

 

அவன் வேண்டாம் என்று பலமுறை மறுத்தும், அந்த மூதாட்டி விடுவதாக இல்லை. கடைசியில் பத்து ரூபாய் கொடுத்தாவது வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சினார். அவரது விடாமுயற்சியைப் பார்த்த இளைஞனுக்கு அவர் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டது.

 

சிறிது நேரம் அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தவன், "ஆயா, உனக்கு பிள்ளைகள் யாரும் இல்லையா? இந்த வயதிலும் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்கிறாய்?" என்று கேட்டான்.

 

அதற்கு அந்த மூதாட்டி தனது வாழ்க்கைக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

 

"என்னைக் கட்டிக்கிட்டவன் குடிச்சே செத்துப்போயிட்டான். அவன் தொல்லை விட்டதுன்னு நினைச்சேன். ஆனா, ஒரே ஒரு பையனைப் பெத்தேன். அவனும் அப்பனைப் போலவே குடிச்சு வாழ்க்கையைச் சீரழிச்சுக்கிட்டு இருக்கான்" என்றார்.

 

அந்தப் பதிலைக் கேட்ட இளைஞன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

 

பின்னர், "இந்த இட்லி மாவு விற்பனையில் உனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?" என்று கேட்டான்.

 

"ஒரு பாக்கெட்டை பதின்மூன்று ரூபாய்க்கு வாங்கி, பதினைந்து ரூபாய்க்கு விக்கிறேன். நாள் முழுக்க வெயில்ல அலைஞ்சு இருபது பாக்கெட் வித்தால்தான் நாற்பது ரூபாய் மிஞ்சும். அதுவே பெரிய விஷயம் கண்ணு" என்றார்.

 

நாள் முழுவதும் உழைத்தும் சில பத்து ரூபாய்களே கையில் மிஞ்சும் அந்த மூதாட்டியின் நிலை இளைஞனின் மனதைப் பாதித்தது. சாலையில் பிச்சை எடுப்பவர்கள்கூட சில நேரங்களில் இதைவிட அதிகமாகச் சம்பாதித்துவிடுவார்கள். ஆனால், இந்த வயதிலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த மூதாட்டி போராடிக் கொண்டிருந்தார்.

 

அந்த நிமிடம் அவனுக்கு தனது ஆசை ஆயாவின் நினைவு வந்தது. மனதுக்குள் ஏதோ ஓர் வலி ஏற்பட்டது.

 

உடனே மூதாட்டியிடம் இட்லி மாவு பாக்கெட்டைக் கொடுக்கச் சொல்லிவிட்டு, நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.

 

"கண்ணு, என்கிட்ட சில்லறை இல்லையே ராஜா" என்று தயக்கத்துடன் கூறினார்.

 

"பரவாயில்லை ஆயா. நீ தினமும் இந்தப் பக்கம் வருவாயா?" என்று கேட்டான்.

 

"ஆமாம் கண்ணு" என்றார்.

 

"நான் தினமும் மாலை ஆறு மணிக்கு இங்கேதான் டீ குடிக்க வருவேன். இந்த நூறு ரூபாய் முடியும்வரை தினமும் ஒரு பாக்கெட் இட்லி மாவு கொடுத்துக்கொண்டே இரு" என்றான்.

 

ஆனால், அந்த மூதாட்டி பணத்தை வாங்க மறுத்தார்.

 

"வேண்டாம் ராஜா. ஒருவேளை நாளைக்கே என் உயிர் போயிட்டா, உன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டியிருக்கும். எனக்கு அது வேண்டாம்" என்றார்.

 

அந்த வார்த்தைகளைக் கேட்ட இளைஞன் அதிர்ச்சியடைந்தான்.

 

"ஆயா, என்ன இப்படிப் பேசுற?" என்று கேட்டான்.

 

அதற்கு அந்த மூதாட்டி சொன்ன பதில் அவனது மனதை மேலும் கனக்கச் செய்தது.

 

"போன ஜென்மத்துல நான் என்ன பாவம் செஞ்சேனோ தெரியல கண்ணு. இந்த ஜென்மத்துல இப்படி நாயா பேயா அலைஞ்சு கஷ்டப்படுறேன். இதுக்கு மேல இன்னொரு ஜென்மம் வேண்டாம் ராஜா" என்று விரக்தியுடன் கூறினார்.

 

அந்த மூதாட்டியின் வார்த்தைகளில் வெறும் வறுமை மட்டும் இல்லை. வாழ்க்கை முழுவதும் அனுபவித்த துயரமும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையும் நிறைந்திருந்தது.

 

அரசாங்கத்தின் சொத்துகளையும், அடுத்தவர்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பவர்கள் வாழும் இதே நாட்டில்தான், நேர்மையாக உழைத்து ஒரு நாளைக்கு சில ரூபாய்களாவது சம்பாதிக்க வேண்டும் என்று போராடும் இந்த மூதாட்டியும் வாழ்கிறார்.

 

வயதான காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்பும், நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்க வேண்டியவர்கள், சாலையோரங்களில் தங்களின் கடைசி காலத்தையும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை எவ்வளவு வேதனையானது!

 

சிலருக்கு பணம் என்பது எண்ணிக்கையில் ஒரு தொகை. ஆனால், சிலருக்கு அதுவே ஒரு நாள் முழுவதும் உயிரைக் கொடுத்து உழைத்துப் பெறும் வாழ்க்கை.

 

ஒருவரின் வறுமையைப் பார்த்து இரக்கப்படுவதைவிட, அவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தாமல் உதவிக்கரம் நீட்டுவதுதான் உண்மையான மனிதநேயம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.