திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இளம்பெண் புகார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் யூடியூபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாகவும் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று மது அருந்தக் கொடுத்து பழகியதாகவும், தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், சில காலத்திற்குப் பிறகு முத்துக்குமரன் திருமணம் செய்ய மறுத்ததுடன், தன்னிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டதாக அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தன்னைத் தவிர்த்து வருவதாகக் கூறியுள்ள அவர், முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகார் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இளம்பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையின் விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.




கருத்துகள் (0)