விவசாயிகளுக்கு சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சி! மண்வளம் முதல் அதிக மகசூல் வரை விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சி முகாம் நடைபெற்றது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதுடன், சாகுபடிச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வனஜாதேவி தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட விஞ்ஞானிகள் முத்துக்குமார் மற்றும் மாசான செல்வம் ஆகியோர் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக, மண்ணின் வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் முறைகள், நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்களுக்குத் தேவையான உரங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், தேவையற்ற சாகுபடிச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, கிடைக்கும் வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சிவகளை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்றனர்.




கருத்துகள் (0)