சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு கார், உதவியாளர் மற்றும் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு காரை பெறமாட்டார்கள் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் பாமக எம்.எல்.ஏ. கணேஷ் மற்றும் சிபிஐ உறுப்பினர் தளி இராமச்சந்திரனும் அரசு கார் தேவையில்லை எனக் கூறினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வாகன வசதி இல்லாத எளிய உறுப்பினர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தார். மேலும், உதயநிதி அரசு பங்களாவில் வசிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுத்த கே.என்.நேரு, அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே தாங்கள் அரசு காரை மறுப்பதாக விளக்கினார். இதனால் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சியினரிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.




