2 சகோதரர்கள் மனைவிகளை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்த கொடூரம்.. பெற்றோருடன் கைது!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையைத் தொடர்ந்து இரண்டு சகோதரர்கள் தங்களது மனைவிகளைக் கொலை செய்து, உடல்களை வனப்பகுதியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சகோதரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவ் சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகிய சகோதரர்கள், தங்களது மனைவிகளான மினி பிரியா மற்றும் ராதிகா குமாரியுடன் நீண்டகாலமாக குடும்ப கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சினைகள் சமரசமாக முடிவுக்கு வந்திருந்த நிலையில், கடந்த நவம்பர் 23-ம் தேதி இருவரும் சேர்ந்து தங்களது மனைவிகளை கோடாரியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றும் சிவ் சங்கர் சாஹு, தனது ஆம்புலன்ஸில் இரண்டு பெண்களின் உடல்களையும் எடுத்துச் சென்று சிம்டேகா வனப்பகுதியில் புதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், மனைவிகள் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, சம்பவத்தை மறைக்கவும் போலீசாரின் விசாரணையை திசைதிருப்பவும் முயன்றுள்ளனர்.
வழக்கின் விசாரணையின்போது சகோதரர்கள் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதைக்கப்பட்டிருந்த உடல்களை போலீசார் மீட்டனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என நான்கு பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)