ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி.. ஆந்திர அரசு புதிய திட்டம்!

ஆந்திரப் பிரதேசத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் 'ஸ்திரீ சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, ஓட்டுநர்கள் வருமான இழப்பைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு பொருளாதார ஆதரவு அளிக்கும் வகையில் புதிய நிதியுதவி திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ள இந்தத் திட்டத்திற்கு 'ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் ஏற்படும் வருமான பாதிப்பைக் குறைத்து, ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக ரூ.231.13 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது. இதன் மூலம் ஆட்டோ மற்றும் டாக்சி தொழிலை நம்பியுள்ள ஓட்டுநர்களுக்கு ஓரளவு பொருளாதார உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)