சென்னை வியாசர்பாடியில் 19 வயது ஆட்டோ ஓட்டுநர் கொலை; தந்தை, 3 மகன்கள் கைது!

சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 19 வயது ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது மூன்று மகன்களை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரைத் தேடி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தனுஷ் (19) என்பவரது அண்ணன் சிலம்பரசனை, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற அப்புகுட்டி மதுபோதையில் வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த தனுஷ் சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் தனுஷை அரிவாளால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட விவகாரம் இந்த மோதலுக்குப் பின்னணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பிரச்சினையில் தனுஷ் தலையிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு நீடித்து வந்துள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையின்போதும் சிலம்பரசன் தாக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகரைச் சேர்ந்த பொய்யாது (58), அவரது மகன்களான அப்புகுட்டி (29), சூர்யா (28), ரவி (26) ஆகிய நான்கு பேரையும் முல்லை நகர் சுடுகாடு அருகே போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவரைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.




கருத்துகள் (0)