புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் சாலைகளை சீரமைக்க ரூ.121 கோடி நிதி ஒதுக்கீடு! 15 மண்டலங்களிலும் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ள திட்டம்!

சென்னையில் சாலைகளை சீரமைக்க ரூ.121 கோடி நிதி ஒதுக்கீடு! 15 மண்டலங்களிலும் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ள திட்டம்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.121 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து, பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் முக்கிய சாலைகளுக்கும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகளுக்கும் தனித்தனியாக நிதி பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 66 பேருந்து வழித்தடச் சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

அதேபோல், சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள உட்புறச் சாலைகளைச் சீரமைப்பதற்காக ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியானது தென் சென்னை, வட சென்னை மற்றும் மத்திய சென்னை எனப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

 

இதில் தென் சென்னையில் உள்ள உட்புறச் சாலைப் பணிகளுக்கு ரூ.18.75 கோடியும், வட சென்னைக்கு ரூ.16.37 கோடியும், மத்திய சென்னைக்கு ரூ.30.99 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் ரூ.121 கோடி மதிப்பிலான இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகள் மூலம் மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சாலை வசதிகளைப் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து சிரமங்கள் குறைவதுடன், நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.