சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250 வரை உயர்வு – வரத்து குறைவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக விளைச்சல் மற்றும் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கிலோ ரூ.100-க்கும் குறைவாகக் கிடைத்து வந்த சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.210 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையின் முக்கிய காய்கறி விற்பனை மையமான கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயம் ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட பாதியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தையில் போதிய அளவு சரக்கு கிடைக்காததால் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.210 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் முக்கிய இடம்பிடிக்கும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதால், குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் சின்ன வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.




கருத்துகள் (0)