மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு – கைது செய்யப்பட்ட நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிஷாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தருமபுரியில் வைத்து நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை, தொடர்ந்து மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தினர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நிஷாந்துக்கு காவல்துறையினர் உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட JM-5 நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்தக் கொள்ளை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. தொடர்ந்து நிஷாந்த் கைது செய்யப்பட்டதை அடுத்து எஞ்சிய நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கொள்ளைபோன 11.7 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் நிஷாந்த் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.




கருத்துகள் (0)