மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் வரவில்லையா? பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்களா? வெளியான விளக்கம்!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 39-வது தவணையான ரூ.1,000 தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த மாதம் வரை தொடர்ந்து இந்தத் தொகையைப் பெற்று வந்த சில பெண்களுக்கு நடப்பு மாதத்திற்கான பணம் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து வருகின்றனர்.
மேலும், பணம் வராதது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து உரிமைத்தொகை பெற்று வந்த தங்களது பெயர்கள் திடீரென பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் பல பெண்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் பட்டியலில் இருந்து யாரும் நீக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிலருக்கு பணம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு வங்கிகளின் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், வங்கிக் கணக்கில் கே.ஒய்.சி (KYC) விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் பணப் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதுவரை உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் உடனடியாக அச்சமடையாமல் தங்களது வங்கிக் கணக்கின் தற்போதைய நிலையைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, கே.ஒய்.சி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை நேரில் அணுகி விவரங்களைக் கேட்டறியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




கருத்துகள் (0)