ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்! அஞ்சல் துறை புதிய வசதி!

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், இந்திய அஞ்சல் துறை வீட்டிற்கே வந்து சேவை வழங்கும் வசதியைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கோ அல்லது அரசு அலுவலகங்களுக்கோ நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைகிறது.
இந்த வசதியின் கீழ், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழான ஜீவன் பிரமாணை (Jeevan Pramaan) வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க முடியும். இதற்காக அஞ்சல் துறையின் 'Postinfo' செயலி வாயிலாக சேவைக்கு கோரிக்கை அளிக்கலாம். அதேபோல், அருகிலுள்ள தபால்காரரைத் தொடர்பு கொண்டும் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
கோரிக்கை அளிக்கப்பட்டதும் தபால்காரர் நேரடியாக ஓய்வூதியதாரரின் வீட்டிற்கே வந்து தேவையான நடைமுறைகளை மேற்கொள்வார். அப்போது பயோமெட்ரிக் முறையில் அடையாளச் சரிபார்ப்பு செய்யப்பட்டு, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ள ஓய்வூதியதாரர்கள் எளிதாகத் தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும். ஓய்வூதியம் தடையின்றித் தொடர்ந்து கிடைப்பதற்கான முக்கியமான இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.




கருத்துகள் (0)