முன்கூட்டியே டிப்ஸ் கேட்ட ஓலா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்.. மத்திய நுகர்வோர் ஆணையம் அதிரடி!

வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே கூடுதல் தொகையை டிப்ஸ் என்ற பெயரில் வசூலிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தியதாகக் கூறி, ஓலா (Ola) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. செயலியில் முன்பணமாக டிப்ஸ் செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்கும் என்ற எண்ணத்தை பயணிகளிடம் ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு பயணத்தை நிறைவு செய்த பிறகே ஓட்டுநருக்கு விருப்பத்தின் அடிப்படையில் டிப்ஸ் வழங்க வேண்டும். ஆனால், ஓலா செயலியில் பயணம் தொடங்குவதற்கு முன்பே ரூ.499 வரை கூடுதல் தொகையை டிப்ஸ் என்ற பெயரில் செலுத்துவதற்கான வசதி இருந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் தவறாக வழிநடத்தப்படுவதாகக் கருதிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், முன்கூட்டியே டிப்ஸ் செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் அறிவிப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஓலா நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




கருத்துகள் (0)