ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5.25 கோடி நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் கடுமையாகக் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் கொடுங்காயமடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே தலா ரூ.25 லட்சமும், கொடுங்காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைப் பரிசீலித்த அரசு, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கூடுதல் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த நிவாரணத் தொகையான தலா ரூ.50 லட்சத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு வழங்கப்பட வேண்டிய தலா ரூ.10 லட்சத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்தவர்களுக்கு ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.




கருத்துகள் (0)