தகாத உறவைப் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன் கொலை! விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொடூரச் செயல் – இருவர் கைது!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இருவரின் உறவைப் பார்த்து, அதை அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவிப்பதாகக் கூறிய 15 வயது பள்ளி மாணவன் விஷம் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜில்லேலா ரவி (15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழும் அபர்ணா (19) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரின் குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப் போவதாக ரவி கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்த இருவரும், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி ரவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு விஷம் கலந்த குளிர்பானத்தை அவருக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி ரவி உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறிய வயதுடைய மாணவன் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)