ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அடுத்தகட்ட விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பச் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில், ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள கிரையோஜெனிக் என்ஜினுக்கான இறுதிக்கட்ட தகுதிச் சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது கிரையோஜெனிக் என்ஜின் தொடர்ந்து 200 வினாடிகள் இயக்கப்பட்டு, அதன் செயல்திறன் மற்றும் செயல்பாட்டுத் தன்மை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, என்ஜினின் முக்கிய பாகங்களான பிரதான என்ஜின் மற்றும் வாயு உருவாக்கி ஆகியவை எவ்வித தடங்கலுமின்றி சீராக இயங்குவது சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்த வெற்றிகரமான சோதனை, ஜி.எஸ்.எல்.வி.-எப்.19 ராக்கெட்டின் அடுத்தகட்ட தயாரிப்புப் பணிகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் இஸ்ரோ தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தச் சாதனை மேலும் வலுசேர்த்துள்ளது.




கருத்துகள் (0)