தமிழகம் முழுவதும் பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்துக்கு தடை – நவம்பர் 25 முதல் அமலுக்கு வந்தது!

தமிழ்நாட்டில் விவசாயப் பயன்பாட்டில் உள்ள பாராகுவாட் டைகுளோரைடு (Paraquat Dichloride) களைக்கொல்லி மருந்துக்கு மாநிலம் முழுவதும் தடை விதித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை 2026 நவம்பர் 25-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசின் அறிக்கையில், பாராகுவாட் டைகுளோரைடு மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட மருந்து என்றும், இதனால் ஏற்படும் விஷ பாதிப்புக்கு உரிய விஷமுறிவு மருந்து (Antidote) இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும் அரசு கவலை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக 17,000 பேர் இந்த மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் களைக்கொல்லி மருந்தின் பயன்பாட்டுக்குத் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள பாராகுவாட் டைகுளோரைடு மருந்துகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்யவும், தடையை முறையாக அமல்படுத்தவும் சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், விவசாயிகள் மற்றும் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இந்த அரசின் உத்தரவைப் பின்பற்றி, தடை செய்யப்பட்ட மருந்தை இனி விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.




கருத்துகள் (0)