தமிழகத்தில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? டிஜிபியிடம் அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீண்டகாலமாக கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த தகவல்களையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், தனிப்பட்ட ஒருவரைக் காணவில்லை என்ற புகாரைத் தாண்டி, மாநிலம் முழுவதும் இதுபோன்ற வழக்குகளின் நிலை என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், இன்னும் எத்தனை வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது உள்ளிட்ட முழுமையான புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, காணாமல் போனவர்களை விரைவாகக் கண்டறிவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணாமல் போனவர்களை அடையாளம் கண்டு கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையின்போது எழுப்பப்பட்ட கேள்விகள் மாநிலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.




கருத்துகள் (0)