டெல்லியில் அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை – புதிய அரசாணை வெளியீடு!

டெல்லியில் பொதுமக்கள் அரசு சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என அம்மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது ஆதார் சரிபார்ப்பு நடைமுறையில் பங்கேற்க விரும்பாதவர்கள் காரணமாக எந்தவொரு அரசு சேவையும் மறுக்கப்படக் கூடாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது. அதில், ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை என்பதையோ அல்லது அதற்கு ஒருவர் மறுப்பு தெரிவிக்கிறார் என்பதையோ காரணமாகக் கொண்டு அரசு வழங்கும் சேவைகளை நிறுத்தவோ, மறுக்கவோ கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் அட்டை இல்லாத பொதுமக்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த மாற்று ஆவணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த அடையாள ஆவணங்கள் மூலம் தங்களது அடையாளத்தை நிரூபிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஆதார் அட்டை இல்லாதவர்களும் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசு சேவைகளைப் பெற முடியும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஆதார் சரிபார்ப்பு தொடர்பான காரணங்களால் பொதுமக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)