திருச்செந்தூர் கோயிலில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு – 10 பவுன் நகைகள், 11 செல்போன்கள் மாயம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா நேற்று நிறைவடைந்தது. விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்தக் கடும் கூட்ட நெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், பக்தர்களிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் செல்போன்களைத் திருடிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கோயில் காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, மொத்தம் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 11 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
விழாவின்போது பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், அவர்களின் உடைமைகளுக்குப் போதிய பாதுகாப்பு இல்லாததால் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் நகைகள் மற்றும் செல்போன்களைப் பறிகொடுத்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில், பொதுமக்கள் பாதுகாப்பாகக் கோயிலுக்கு வந்து திரும்புவதற்குத் தேவையான முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை என்றும், இதுவே தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெறக் காரணம் என்றும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




கருத்துகள் (0)