விருதுநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தாய், 10 வயது மகன் உயிரிழப்பு – கடன் பிரச்சினையால் சோக முடிவு!

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அருகே கடன் தொல்லை காரணமாக பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாண்டிச்செல்வி (30) என்பவர் தனது மகன் பிரதீப்புடன் சூலக்கரை ரயில்வே கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அம்ரித் பாரத் ரயில் வந்தபோது, அதன் முன் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவத்தில் தாயும் மகனும் உயிரிழந்தனர். குடும்பத்தில் நிலவி வந்த கடன் தொடர்பான பிரச்சினைகளே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழப்பதற்கு முன்பாக பாண்டிச்செல்வி தனது கணவருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடன் பிரச்சினையின் பின்னணி, அவர் அனுப்பிய வீடியோ உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)