செஞ்சியில் சிறுமி மாயம்.. ஜெயங்கொண்டானில் மற்றொரு சிறுமியைக் கடத்த முயற்சி! திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடும் விமர்சனம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமி ஒரு மாதமாகியும் இதுவரை மீட்கப்படாத நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டானில் மற்றொரு சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து குழந்தைகள் கடத்தல் முயற்சிகளும் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செஞ்சியில் மாயமான சிறுமியை இதுவரை மீட்க முடியாதது ஏன் என்றும், அந்தச் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. மாயமான சிறுமியை விரைந்து மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




கருத்துகள் (0)