செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
சமையல்

சிக்கன் 65 சலித்துவிட்டதா? காரசாரமான சுவையில் அசத்தும் Guntur Chicken Roast செய்வது எப்படி?

சிக்கன் 65 சலித்துவிட்டதா? காரசாரமான சுவையில் அசத்தும் Guntur Chicken Roast செய்வது எப்படி?

 

அசைவ உணவுகளை விரும்புபவர்கள் சிக்கனை பல்வேறு வகைகளில் சமைத்து சாப்பிடுவார்கள். சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, குழம்பு, சிக்கன் 65 என பல உணவுகள் இருந்தாலும், சற்று வித்தியாசமான சுவையில் சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதன் ருசியே தனிதான்.

அந்த வகையில் ஆந்திராவின் குண்டூர் ஸ்டைலில் தயாரிக்கப்படும் காரசாரமான Guntur Chicken Roast அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருக்கும். மசாலாக்களின் நறுமணமும், கறிவேப்பிலையின் மணமும் இணைந்து இந்த ரெசிபிக்கு கூடுதல் சுவையைத் தருகின்றன.

சாதம், பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி என அனைத்து உணவுகளுக்கும் சிறந்த சைடிஷ்ஷாக அமையும் இந்த குண்டூர் சிக்கன் ரோஸ்ட்டை வீட்டிலேயே எளிதாகத் தயாரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மசாலாப் பொடி தயாரிக்க:

  • கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

  • கிராம்பு – 5 முதல் 6

  • ஏலக்காய் – 4

  • மராத்தி மொக்கு – ¼

  • நட்சத்திர சோம்பு – ½

  • இலவங்கப்பட்டை – 1 இன்ச்

  • சீரகம் – ½ டேபிள் ஸ்பூன்

சிக்கனை வேகவைக்க:

  • கோழி இறைச்சி – ½ கிலோ

  • பச்சை மிளகாய் – 4

  • இலவங்கப்பட்டை – சிறிய துண்டு

  • கிராம்பு – 3

  • இஞ்சி – ஒரு விரல் அளவு

  • பூண்டு – 15 முதல் 20 பல்

  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

  • பிரியாணி இலை – 1

  • உப்பு – தேவையான அளவு

சிக்கன் ரோஸ்ட் தயாரிக்க:

  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

  • வெங்காயம் – 1

  • இஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்

  • கறிவேப்பிலை – 3 கொத்து

  • சிக்கன் ஸ்டாக் – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன்

  • மிளகாய்த்தூள் – 1¼ டேபிள் ஸ்பூன்

  • எலுமிச்சை – ½ பழம்

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாற்றைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி வைத்துக்கொண்டு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக மசாலாப் பொடிக்குக் கொடுக்கப்பட்டுள்ள கொத்தமல்லி விதைகள், கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, நட்சத்திர சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் ஆறவைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அடி கனமான பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைச் சேர்க்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இலவங்கப்பட்டை, கிராம்பு, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், பிரியாணி இலை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை முக்கால் பதம் வேகவைக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளையும், வேகவைத்த தண்ணீரையும் தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் முக்கால் பதம் வேகவைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இதனுடன் முன்பு அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து மசாலாக்கள் சிக்கனில் நன்றாகப் படியும்படி கிளறவும்.

அடுத்து வேகவைத்த சிக்கன் ஸ்டாக்கிலிருந்து 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும். மசாலாக்கள் சிக்கனுடன் நன்றாகக் கலந்து, தேவையான அளவு சுருண்டு ரோஸ்ட் பதத்திற்கு வரும் வரை கிளறிக்கொண்டிருக்கவும்.

இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் கிளறவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் சுவையான, காரசாரமான குண்டூர் சிக்கன் ரோஸ்ட் தயார்!

சிறிய குறிப்பு: சிக்கனை வேகவைத்த ஸ்டாக்கை ஒரே நேரத்தில் அதிகமாகச் சேர்க்காமல் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். அப்போதுதான் சிக்கன் மசாலாவுடன் நன்றாகப் பொரிந்து சுவையான ரோஸ்ட் பதத்தில் கிடைக்கும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.