இந்தியாவில் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் குவால்காம்! பெங்களூரு, சென்னை, ஐதராபாத் அலுவலகங்களிலும் பாதிப்பு?

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் (Qualcomm), தனது நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் பெங்களூருவில் பணியாற்றி வரும் மூத்த பொறியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் செயல்பட்டு வரும் குவால்காம் அலுவலகங்களிலும் பணிநீக்க நடவடிக்கை எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பணிநீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக மூன்று மாதச் சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி குவால்காம் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களான பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் முன்னணி ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், குவால்காமின் இந்தப் பணிநீக்க நடவடிக்கை தொழில்நுட்பத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.




கருத்துகள் (0)