மனித கட்டுப்பாட்டை மீறும் ஏஐ மாடல்களை 35 விநாடிகளில் முடக்கலாம் – புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன்ஏஐ!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் ஏஐ மாடல்களைக் கட்டுப்படுத்தும் புதிய பாதுகாப்பு அமைப்பை ஓபன்ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'கன்ட்ரோல் ரூம்' (Control Room) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கண்காணிப்பு அமைப்பு, ஏஐ மாடல்கள் செயல்படும்போது அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஆபத்தான செயல்பாடுகள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டால், இதில் உள்ள 'கில் சுவிட்ச்' (Kill Switch) வசதியைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஏஐ மாடலின் வெளியீடுகளை உடனடியாக முடக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறக்கூடிய ஏஐ செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும். வெறும் 35 விநாடிகளுக்குள் ஆபத்தான ஏஐ செயல்பாடுகளை முடக்கும் திறன் கொண்டதாக இந்த அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியமாகி வரும் நிலையில், இத்தகைய கண்காணிப்பு அமைப்புகள் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)